06 May 2024

நட்பு - பாகம் 1


ஔவையார்  - நட்பின் இலக்கணம் 



அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறவார் உறவு


                                                                          மூதுரை -ஔவையார்

அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல் =  நீர்  அற்ற குளத்தைவிட்டு பறந்து செல்லும் பறவை போல்

உற்றுழித் தீர்வார் உறவு அல்லர் =  (உற்றுழி என்றால் துன்பம் ) வறுமை காலத்தில் விலகி செல்வர் "உறவு"  அல்லர் (நண்பர்கள்  இல்லை)

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே =
கொட்டி என்றால்  படரும் தாவரவகை. அந்தக் கொட்டி செடிகளைப்  போல, ஆம்பல்  (அல்லி மலரை போன்று), நெய்தல் மலர்களைப் போன்று  ( வெள்ளாம்பல், கருங்குவளை ஆகியவை நெய்தல் மலர்கள் )

ஒட்டி உறவார் உறவு,=  குளம் வற்றினாலும் அக்குளத்தை விட்டுவிட்டு  வெளியேறாமல் குளத்தினுள்ளேயே சேர்ந்து  இருப்பது உண்மையான உறவு.


சிறல் பறவை மீன்களுக்காக குளத்தின் நீரில் தன் சிறகு படர சுற்றி வரும்.  அக்குளம்   நீரில்லாமல் வற்றிப்போனால் இனிமேல் மீன் கிடைக்காது  என்று வேறு நீர்நிலைகளை தேடி பறக்கும். ஆனால் குளத்தில் உள்ள மலர்களும் செடிகொடிகளும் ஒரு பொழுதும் குளத்தை நீங்குவதில்லை. குளம் வற்றினால் தானும் வாடும்.   

ஒருவருக்கு  வறுமை அல்லது துன்பம்  வந்தால் விட்டு விலகுவது நட்பின் இலக்கணம் அன்று.  அவருடன் துணைநின்று தானும் வருந்தி அவரின் துன்பத்தை போக்குவதே உண்மை நட்பின் இலக்கணம் ஆகும்.      


திருவள்ளுவர் - நட்பின் கடமை  

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு

                                                                       குறள் 784

நட்டல் = நட்பு     நகுதற்பொருட்டன்று = வெறும் வேடிக்கையாக சிரித்து பொழுதுபோக்காய் இருப்பதற்குகாக மட்டுமல்ல   
மிகுதிக்கண் = அறவழி அல்லாத பழியும் பாவம் மிகும் செயல்களை ஒருவன் செய்ய முற்படுவராயின்
மேற்சென்று =
அவை மிகும் முன்னரே ( தானாக முன்வந்து அறிவுரை கூறி  அதை  செய்தற்கு முன்னரே  தடுத்தல்)
இடித்தற்பொருட்டு = அவ்வாறு இன்சொல் (அறிவுரைக்கு) கேட்கா  விட்டால், இடித்து (கடும் சொல்லால் )அதை தடுப்பதும் நட்பின் கடமை ஆகும்.

இரண்டு வரிகளில்   நட்பின் இலக்கணத்தை இவ்வளவு ஆழமாக (படி படியாக ) விளக்க வள்ளுவரால் மட்டுமே முடியும்.

 

நாலடியார் - நட்பின் வகைகள்   

நாய்க்காற் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்?
சேய்த்தானுஞ் சென்று கொளல்வேண்டும், செய்விளைக்கும்
வாய்க்கா லனையார் தொடர்பு.


                                                                              நாலடியார் 218

நாய்க்காற் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும் = நாயின் கால்களின் சிறு விரல்களை போன்று நெருக்கமாக எப்பொழுதும் இருந்தாலும்

ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்? =  "ஈ" காலின் அளவு கூட உதவாதவராக இருக்கும் நண்பர்களால் என்ன பயன்

சேய்த்தானுஞ் சென்று கொளல்வேண்டும் = தொலைவில் இருந்தாலும் இவர்களின் நட்பே சிறந்தது   

செய்விளைக்கும் வாய்க்கா லனையார் தொடர்பு = வயல் நிலங்களை (கழனி)  நீர் நிலையங்களில் இருந்து தேடி வந்து நீர் பாய்ச்சி விலைநிலங்களாக செழிக்க வைக்கும்  பண்பினை உடைய "வாய்க்கால்" போன்றவர்களின் நட்பு.

நாயின் கால்களில் இருப்பதை போல எப்போதும் அருகிலேயே ஒன்றாக  இருந்தும் ஒரு ஈ யினது கால் அளவு கூட உதவாமல் இருக்கும் நண்பர்களால் என்ன பயன் ?.   விளைநிலங்கள்  எந்த உதவி செய்யாமல் இருந்தாலும்  எங்கோ இருக்கும் கிணற்றில் இருந்து நீர் பாய்ச்சி விளைவிக்கும் வாய்க்காலை போன்ற நண்பர்களே சிறந்தவர்கள்.

ஒன்றாய் சுற்றி திரிவதை விட தாமாக முன் வந்து உதவுவதே சிறந்த நட்பு என்கிறது நாலடியார்.  
 

 

நண்பர்களின் வகை  மூன்று 

கடையாயார் நட்பிற் கமுகனையார்; ஏனை
இடையாயார் தெங்கின் அனையர் தலையாயார்
எண்ணரும் பெண்ணை போன்று இட்டஞான்று
இட்டதே  தொன்மையுடையார் தொடர்பு


                                                                        நாலடியார் 216

நண்பரகளை மூன்று வகையாக பிரிக்கலாம். 

1. முதல் - சான்றோர் நட்பு
2. இடை - பொதுவான மனிதர்களின் நட்பு
3. கடை - கீழ்மக்கள் அல்லது கூடா  நட்பு

கடையாயார் நட்பிற் கமுகனையார் =  கீழ்மக்கள் நட்பு "கமுகு" மரத்தை போன்றது. ( பாக்கு மரம்).

ஏனை இடையாயார் தெங்கின் அனையர் = மற்ற இடையர்வர்களின் நட்பு, தென்னை மரத்தை போன்றது

தலையாயார் எண்ணரும் பெண்ணைபோன்று =  தலையானவர்கள் ( சிறந்தவர்களின் ) நட்பு "பெண்ணை" (பனை மரம்) போன்றது.

இட்டஞான்று இட்டதே, தொன்மை யுடையார் தொடர்பு. - ஒருமுறை நட்புக்கொண்டால் எப்பொழுதும் நீடிக்கும்.

தினமும் தண்ணீர்விட்டால் தான் பயன் தரும் பாக்கு மரம். அடிக்கடி உதவி செய்தால் தான் சிலர் நண்பர்களாக இருப்பார்கள். ( கடைமக்கள் நட்பு).  தினமும் நீர் பாய்ச்சாவிட்டாலும் அடிக்கடி நீர் விட்டால் தான் பயன் தரும் தென்னை மரம்.  பெரும்பாலோரின் நட்பு தென்னை போன்றதே. ( இடை மக்கள் நட்பு).  விதை இடும் போது தண்ணீர் விட்டால் போதும் பின் தானாக வளர்ந்து பயன் தரும் பனை போன்றது சான்றோர்களின் நட்பு. இட்டஞான்று இட்டதே -  முதன்முதலில் நட்பு ஏற்படும் போது கொண்ட உணர்வே இறுதி வரை நிலைக்கும்.


முடிவுரை
 நமது நட்பை ஔவையார், வள்ளுவர், நாலடியார் ஆசிரியர்கள்  எவ்வாறு இடை போடுவார்கள் என்று நாமே மேற்கூறிய அளவுகோல் வைத்து பார்க்கலாம்.  மேலும் நட்புக்கு இலக்கணமான "கபிலர் பாரி", " அவ்வை அதியமான்" , "கோப்பெருஞ்சோழர் பிசிராந்தையார்" கதைகளை கட்டுரை பிரிவில் இன்னொரு நாள் விரிவாக பார்க்கலாம் .  பாகம் 2ல் -  கூடா  நட்பு  -எத்தகைய நட்பை வைத்தக்கொள்ள  கூடாது என்பதை நாலடியார், இன்னா நாற்பது, கண்ணதாசன் போன்றவர்களின் வரிகளில் காண்போம்.   



 



 



















ஆக்கம்
Thamizhsuvadi

Subscribe below to get future posts from தமிழ்ச்சுவடி