27 Nov 2021

மதம் (சமயம்)

கம்பர் 

தோள் கண்டார். தோளே கண்டார்.
   தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார். தாளே கண்டார்;
   தடக் கை கண்டாரும். அஃதே;
வாள் கொண்ட கண்ணார் யாரே.
   வடிவினை முடியக்கண்டார்?-
ஊழ் கொண்ட சமயத்து அன்னான்
   உருவு கண்டாரை ஒத்தார்

                                                                          கம்பராமாயணம்

அயோத்தி மக்கள் இராமனை முதல் முறை பார்த்த பொழுது எவ்வாறு விளையாட்டாக சண்டை போட்டு கொண்டனர் என்பதை விளக்கும் பாடல் இது.

தோள் கண்டார். தோளே கண்டார் =  முதலில் தோளைக் கண்டவர்கள் தோளை மட்டுமே உற்று பார்த்தனர்.  (தோள் அழகை தாண்டி அவர்கள் கண்களால் போக முடியவில்லை) 

தொடு கழல் கமலம் அன்ன தாள் கண்டார். தாளே கண்டார்; = கழல் அணிந்த தாமரை போன்ற சிவந்த காலழகை கண்டவர்கள் இராமனின் கால்கலையே பார்த்து இருந்தனர்.

தடக் கை கண்டாரும். அஃதே =  வலிமை வாய்ந்த  கரங்களின் ( கைகளின்)   அழகைப் பார்த்தவர்களும்  அவற்றையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக்கண்டார்? =  கத்தியை போன்று கூரிய பார்வை உடையவர்கள், அங்கு இருந்தவர்கள். அப்படி இருந்தாலும் இராமனின் முழு அழகை காண முடியவில்லை. 

ஊழ் கொண்ட சமயத்து அன்னான்  உருவு கண்டாரை ஒத்தார்: = ஒவ்வொரு சமயமும் பிற சமயங்களின்  (மதங்களின்) கருத்துக்களை ஏற்காது தாம் கண்ட கடவுளையே சிறந்தது என்று சண்டை பிடிப்பது போன்று இருந்து.    

இராமனின் உறுப்புகளில் எதை ஒருவர் முதலில் பார்த்தாரோ அதை தாண்டி பார்க்க முடியாமல் கண் வைத்தவாறு பார்த்தனர்.  அவ்வாறு ஒரு பகுதியை பார்ப்பதனால் அயோத்தி மக்களுக்கு கண் கூர்மையாக தெரியவில்லையோ என்ற கேள்வி எழும். கம்பர் அடுத்த வரியில் "வாள் போன்று"  அவர்கள் கண்கள் கூர்மையானவை என்று சந்தேகத்தை போக்குகிறார்.  எனினும் அவர்கள்  முழு உருவத்தை பார்க்காமல் தாங்கள் பார்த்ததே சிறந்தது என்று சண்டை போட்டு கொண்டு இருந்தார்கள்.        

இந்த சண்டை எவ்வாறு என்றால்  ஓவ்வொரு  மதமும் இறை என்பது மதங்களை தாண்டிய உயர்ந்த நிலை என்று உணராமல்  தாம் கண்ட கடவுளே சிறந்தது என்று சண்டை போடுவது போன்று இருந்தது என்கிறார் கம்பர்.

சமயங்கள் பலவும் பலவாக இறையின் தன்மையை விளக்கினாலும் ,இறை என்பதை முழுதாய் விளக்கிய சமயம் இல்லை. ( இறை என்பது சமயங்களை தாண்டிய ஒரு உயர்நிலை).  இராமனின் அழகை விளக்க எழுதிய பாடலில் சமய கருத்தை புகுத்தியது பண்டைய தமிழர்களின் சமயத்தை (மதத்தை) பற்றிய உயர்ந்த புரிதலை வெளிப்படுத்துகிறது.


ஔவையார்

புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்    

                                                                     நல்வழி

புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை =  ஒருவன் முன்னம் செய்த புண்ணிய பாவங்கள்.

மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் = அவையே இங்கு பிறந்த அனைவர்க்கும் கூட வரும்

எண்ணுங்கால்ஈதொழிய வேறில்லை; = இதை தவிர வேறு எதுவும் இறுதி வரை நிலைக்காது.

எச்சமயத்தோர் சொல்லும் தீதொழிய நன்மை செயல் =  சமயங்களுக்கும் கருது வேறுபாடு இருந்தாலும் அனைத்தும் ஒன்றை மட்டும் கூறுகிறது. அது நன்மையை செய். தீமையை செய்யாதே.   

ஒருவன் முற்காலத்தில் செய்த செயல்களுக்கு ஏற்ப புண்ணியமும்  பாவமும் மட்டுமே  இறக்கும் போது கூட வரும்.  இதைத் தவிர வேறு எதுவும் கூட வாராது. அதனால் எந்த சமயத்தை ஒருவன் பின்பற்றினாலும் அனைத்து சமயமும் கூறுவது போல  தீமையை செய்யாமல் நன்மையை செய்ய வேண்டும்  . ஔவையாரும் சமயம் பல இருந்தாலும்,  அவற்றுள் பல முரண்பாடு இருந்தாலும் ஒரு கருத்தை அணைத்து மதங்களும் வலியுறுத்துகிறது என்கிறார் . அது அறம் செய் அறம் அல்லாதது செய்யாதே என்பதே ஆகும் 

    

திருமூலர் 

ஒன்றதே பேரூர், வழி ஆறு அதற்கு உள
என்றது போல இருமுச் சமயமும்;
நன்றுஇது தீதுஇது என்று உரையாளர்கள்
குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே

                                                                          திருமந்திரம்

ஒன்றதே பேரூர், வழி ஆறு அதற்கு உள= ஊர் ஒன்று அதற்கு செல்லும் வழிகள் பல உள்ளன
என்றது போல இருமுச் சமயமும் =
என்பதை போன்று ஆறு பெரிய மதங்களும்
நன்றுஇது தீதுஇது என்று உரையாளர்கள் =
தங்கள் பாதை சரி மற்ற பாதை தவறு என்று கூறினால்
குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே =
மலையை பார்த்து  குரைக்கும் நாய் போன்றவர்கள் ஆவார்கள்

இறை ஒன்றே; ஒருவரின் நிலையை பொறுத்து அவர்களின் வழி வேறாக இருக்கலாம்.  அந்த வழி தான் சமயம் என்பது.  ஒரே ஊருக்கு  ஒரு வழியில் செல்பவர் இன்னொரு  வழியில் வருபவர்களை குற்றம் சொல்ல மாட்டார்கள். தங்கள் வழி சிறந்தது என்று கூறினால் அவர்கள் மலையை பார்த்து குறைக்கும் அறிவற்ற நாய்யை  போன்றவர்கள் என்கிறார் திருமூலர்.

தாயுமான அடிகளார்

வேறுபடும் சமயம் எல்லாம் புகுந்து பார்க்கின்,
விளங்கு பரம்பொருளே! நின் விளையாட்டு அல்லால்,
மாறுபடும் கருத்து இல்லை, முடிவில் மோன
வாரிதியில் நதித்திரள்போல் வயங்கிற்று அம்மா



ஒன்றோடு ஒன்று முரண்பாடக தோன்றும் சமயங்கள்  அனைத்தினையும்  ஆராய்ந்து பார்த்தால், அனைத்திற்கும் மேலாகத் உயர்ந்து நிற்பது இறை பொருள்.   பல ஆறுகளின் வெள்ளமானது, கடலில் கலந்த போது, கடல் நீரில் உள்ளது எந்த ஆறு என்று பகுத்து அறியமுடியாதவாறு போல முடிவில்லாத இறை பெருங்கடலில், எல்லாச் சமயங்களும் கலந்து வேறுபாடு இல்லாமல் ஒன்றாகிறது என்கிறார்.  

மாணிக்கவாசகர் 

உவலைச் சமயங்கள், ஒவ்வாத சாத்திரமாம்
சவலைக் கடல் உளனாய்க் கிடந்து, தடுமாறும்
கவலைக் கெடுத்து, கழல் இணைகள் தந்து அருளும்
செயலைப் பரவி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ


                                                                        திருவாசகம்

உவலைச் சமயங்கள், ஒவ்வாத சாத்திரமாம் = பொய்யான சமயங்கள் , ஒன்றுக்குஒன்று முரண்பாடான சாத்திரங்கள், வழிமுறைகள் 
சவலைக் கடல் உளனாய்க் கிடந்து, தடுமாறும் கவலைக் கெடுத்து, = என்று குழப்ப கடலுக்குள் தடுமாறாமல்
கழல் இணைகள் தந்து அருளும் செயலைப் பரவி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ = திருவடிகளை தந்து அருளும் இறையை போற்றி நாம் தெளிவோம்  

முடிவுரை

சமயம், மதம் என்பன பலவாகினும் அவை கூறும் இறை ஒன்றே.   எல்லா மதமும்  இறை என்ற பேரூரை அடைய ஒரு வழியே.   வழியை கடந்து சென்றால் தான் ஊர் வந்து சேரும். வழியே சிறந்தது என்று அதை (மதத்தை) கடக்காமல் இருந்தால் இறையை அடைய முடியாமல் மதமே (பித்து) பிடிக்கும்.   

  






 
 

 
ஆக்கம்
Thamizhsuvadi

Subscribe below to get future posts from தமிழ்ச்சுவடி