21 Jan 2022

கேள்வி வகைகள்



தாத்தா, பேரனிடம் : "என்ன பாலு, யோசிச்சிகிட்டே வர ?"
பேரன் : தாத்தா, அம்மா என்கிட்ட ஒன்னு கேட்டாங்க , நான் திரும்ப ஒன்னு கேட்டேன். அதுக்கு   

"உன்கிட்ட ஏவல்  வினா கேட்டா, நீ திரும்ப ஐய வினா கேக்குறியா" னு சொன்னாங்க
எனக்கு அம்மா என்ன சொன்னாங்கனு புரியல, நீங்க சொல்றீங்களா? 

தாத்தா : என்னோட இலக்கண புத்தகத்த எடுத்துட்டுவா
இந்த பக்கத்துல இருக்குற நன்னூல் அடிகளை படி

அறிவு அறியாமை ஐயுறல் கொளல் 
ஏவல் தரும்வினா ஆறும் இழுக்கார் 

                                                                       
                                                                    - நன்னூல்

இது என்ன தாத்தா??

உங்க அம்மா சொன்னது இதுல இருக்கானு பாரு
ஆமா தாத்தா !!   ஏவல்  வினா , ஐய வினா  !!

ஆமா, மொத்தம் 6 வகை வினா இருக்கு 
1. அறி வினா 
2. அறியா வினா 
3. ஐய வினா 
4. கொளல் வினா 
5. ஏவல் வினா 
6. தரும் வினா (கொடை வினா)

விரிவா சொல்லுங்க தாத்தா..

நேத்து பள்ளி வகுப்புல, உங்கிட்ட ஏதாவது கேட்டாங்களா ?
"நம்ப சூரிய குடும்பதத்துல, எது பெரிய கோள்" னு கேட்டாங்க

எதுக்கு உன்கிட்ட கேக்குறாங்க, உங்க ஆசியர்க்கு அது தெரியாதா ?
அவங்களுக்கு தெரியும், எனக்கு தெரியுமானு கேட்டாங்க

இதுக்கு பேரு  தான் அறி வினா,
அறிந்த ஒன்றை சோதிக்க கேட்பது அறி வினா.



நீ ஆசிரியர் கிட்ட கேட்கிறது ...
இருங்க நானே சொல்றேன், அறியா வினா ! 

நான் இப்ப உங்ககிட்ட   அம்மா சொன்னது புரியலனு கேட்டேனே இதுவும் அறியா வினா தானே
சரியா சொன்ன

அறியாத ஒன்றை அறிந்துகொள்ள கேட்பது  அறியா வினா



உன்கிட்ட அம்மா என்ன கேட்டாங்க
"மணி ஆச்சு, இன்னும் குளிக்கலையா"னு கேட்டாங்க

எதுக்கு இப்படி கேட்டாங்க
என்ன போய் குளிக்க சொல்ல தான்

நீ செய்ய வேண்டியத கேள்வியா கேட்டாங்கள , அதான் ஏவல் வினா
ஒரு செயலை செய்யும் பொருட்டு கேட்பது ஏவல் வினா



அம்மா கிட்ட நீ திரும்ப என்ன சொன்ன
"வெந்நீரா  மா ?" னு கேட்டேன்

நீ கேட்டது ஐய வினா ..சந்தேகத்தோட கேக்கறது ..

ஐயத்தை அகற்றிகொள்ள கேட்பது ஐய வினா


ஓ ..ஓ ..
அம்மா என்ன குளிக்க சொல்றதுக்கு ஏவல் வினா கேட்டாங்க
நான் என்  சந்தேகத்த தீர்க்க ஐய வினா கேட்டேன் ..புரிஞ்சிது தாத்தா..
 
இன்னும் ரெண்டு வகை இருக்கு அது என்ன தாத்தா ?
நான் இப்ப கேட்டது அறியா வினாதானே தாத்தா ?



ஹாஹா..
அறியா வினா கேட்டுட்டு, தொடர்ந்து ஐய வினாவும் கேட்டுட்ட  ..
சரி தான், நீ கேட்டது அறியா வினா தான்.. மீதம் ரெண்டு வகை வினா சொல்றேன்..


கடைக்கு போய் அப்பா கீரை வாங்கிட்டு வர சொன்னா, நீ கடைக்காரர் கிட்ட எப்படி கேட்ப ?
" கீரை கட்டு இருக்கா  ? ஒரு கட்டு கீரை எவ்வளவு ?"

விலை கேட்டு, நீ என்ன செய்ய போற ?
நான் கீரை வாங்கர்துக்கு கேக்குறேன்

இதுக்கு பேரு தான் கொளல் வினா.
ஒரு பொருளைப் பெருவதற்காக கேட்பது கொளல் வினா
 


ஒரு அரசன் வழிப்புலவர் கிட்ட கேள்வி கேக்குறாரு
"உங்களுக்கு துணி மணி இருக்கா ?  தங்க இடம் இருக்கா ?"
எதுக்கு கேக்குறாரு

அதை எல்லாம்  கொடுக்கத்தான் அரசர் கேக்குறாரு

இதுக்கு பேருதான் கொடை வினா
 ஒரு பொருளை கொடுப்பதற்காக, கொடுப்பதை உணர்த்தும் வகையில் கொடுப்பவர் எழுப்பும் வினா கொடை வினா


இதுதான் ஆறு வகை வினா ..
இதுபோல விடை வகைகளும் இருக்கு..

சொல்லுங்க தாத்தா .. அப்புறம் இதுலாம் தெரிஞ்சிகிட்டா  என்ன பயன் இருக்குனு சொல்லுங்க..

சரியா கேட்ட , கண்டிப்பா பயன் இருக்கு ... நாளைக்கு சொல்றேன்... ( அடுத்த பதிவு )

-------------

ஆக்கம்
Thamizhsuvadi

Subscribe below to get future posts from தமிழ்ச்சுவடி