25 Dec 2021

இயேசு காவியம்

நூலாசிரியர்  - கவிஞர் கண்ணதாசன்
காலம்: தற்காலத் தமிழ்க் காப்பியமாகும். (1982)
பாகங்கள்: 5
தகவல்:  கவிஞர் 1981இல் இயற்கை எய்தினார். இந்த நூல் 1982 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அப்போதய முதல்வர் திரு எம்.ஜி. ஆர் முதல் பிரதியை பெற்று கொண்டார்.
 
கண்ணதாசன் அவரது இயேசு காவியம் நூலை பற்றி கூறியது : "பல சமயங்களில், பலர் என்னை இறவாக் காவியம் ஒன்று எழுதுங்கள் என்று வற்புறுத்தியதுண்டு. அந்த இறவாக் காவியம் 'இயேசு காவியம்'தான் என்று நான் உறுதியாகக் கூறமுடியும்".

எளிய நடை, கற்பனை நயம்,  நுண்ணிய பொருள் என  கவிஞர் தனக்கே உரித்தான திறத்தில்   15 நாட்களுக்குள் எழுதிய நூல்.  400 பக்கங்களை கொண்டுள்ள இந்த நூலை குற்றாலத்தில் இருந்து எழுதினார். குற்றால அருவியும் கவிதை அருவியும் சேர்ந்து பொழிந்தது போன்று சுவை மிக்க நூலாய் விளங்குகிறது.

இயேசுவின் தெய்வ பிறப்பு, ஏரோது மன்னனின் கொடிய ஆட்சிக்கு அஞ்சி சூசையப்பரும் மரியம்மையும் எகிப்து நகருக்கு செல்லுதல், இயேசுவின் வாலிபம், பின் ஜெருசலேம் வருதல், அவரின் இயற்கை ஞானம், அவர் நிகழ்த்திய அற்புதங்கள், அவரின்  சீடர்கள்,  யூதர்களிடத்தில்  30 வெள்ளிக்காசுகளுக்காக யூதாஸால் காட்டிகொடுக்க படுதல், சிலுவையில் இடுதல், பின் மூன்று நாட்களில் உயிர்த்து எழுந்தது வரை கவிஞர் மிகவும் ரசிக்கும்படி கவிதையாய் படைத்துள்ளார்.

சான்றாக இரண்டு பாடல்கள்

1. இயேசுவின் பிறப்பு பற்றிய  சில பாடல் வரிகள் 

துல்லிய பட்டுப் போன்ற
     தூயவள் மரியாள் கையில்
மெல்லிய பாலன் இயேசு
     விளக்கெனப் புன்ன கைத்தான்!
நல்லவர் உள்ளம் போல
     நலம்பெறப் பிறந்த செல்வன்
இல்லைஎன் னாத வாறு
     இருகரம் விரித்து நின்றான்!


மாணிக்கத் தொட்டிலுக்கு வாய்க்காத
           பெருமையெல்லாம்
ஆநிரைத் தொழுவினுக்கு ஆரளித்தார்
           எங்கோவே!





மரியன்னை கையில் இருந்த குழந்தை சிரிப்பதை -  விளக்கின் ஒளி போல என்று உவமை கூறுகிறார்.  வளர்ந்த பிறகு உலகிற்கு ஒளியாக ஏசு விளங்க போவதை நயமாக குழந்தை சிரிப்பை வர்ணிப்பதில் புகுத்தியுள்ளார்.

"நல்லவர் உள்ளம் போல நலம் பெற பிறந்த செல்வன்"   -  நல்லவர் உள்ளம் வஞ்சம், அவா , மயக்கம்  என்று மாசு படாமல் தூய்மையாக இருப்பதனால்  நலம் பெரும். அதை போன்று பிறந்த குழந்தை தூய்மையே வடிவாக விளங்குகிறது. ( பிற்காலத்தில் சிலுவையில் இட்ட போதும் வஞ்சகர்க்கும் சேர்த்து மன்னிப்பு கேட்பார் என்ற கருத்தை உணர்த்துகிறது) 

குழந்தை இயல்பாக  கை விரித்து விளையாடுவதை " இல்லை என்னாதவாறு " என்று உவமை கூறுவது பிற்காலத்தில் அனைவர்க்கும்    இல்லை என்று சொல்லாமல் தன் அன்பையும் அருளையும் வழுங்குவார் என்பதை அழகாகக் குறிப்பால் விளக்குகிறார்.


2.ஏசுவின் பாலிய பருவத்தை விளக்கும் பாடல் 

வரிசை படுத்தி பாடுவது கவிஞருக்கு கை வந்த கலை. மிகவும் சுவையாக விளங்கும் பாடல் இது.    

அடுத்தவர் இடத்தில் அன்பு காட்டியும்
ஆடல் பாடல் அணுகா திருந்தும்
இழந்தோர் இடத்தே இரக்கம் மிகுந்தும்
ஈகை உதவி இதயம் மலர்ந்தும்
உறவோர் இடத்து உள்ளன்பு வைத்தும்
ஊரார் புகழப் பணிவுடன் நடந்தும்
என்றும் தந்தை எதைச்சொன் னாலும்
ஏற்று முடித்தும் இயல்புற வாழ்ந்தும்
ஐயம் தவிர்க்க ஆசானை அணுகியும்
ஒத்த வயதே உடையோர் இடத்து
ஓதும் பொருளில் உயர்ந்தே நின்றும்                                         
கன்னித் தாயின் காலடி வணங்கியும்
காலம் அறிந்து கணக்குற வாழ்ந்தும்
கிட்டா தாயின் வெட்டென மறந்தும்
கீழோர் மேலோர் பேதம் இன்றியும்
குணத்தில் தேவகு மாரனென் றுலகம்
கூப்பி வணங்கக் குறைகள் இலாமலும்
கெட்ட பழக்கம் எட்டா நிலையில்
கேடுகள் எதையும் நாடா தளவில்
கைத்தலத் துள்ளே காலத்தை அடக்கியும்
கொஞ்சி வளர்ந்து குழந்தையில் இருந்து
கோமகன் வயதில் ஆறிரண் டடைந்தார்!




குழந்தை ஏசு வளர்ந்து நற்பண்புகள் அனைத்தும் பெற்று பால பருவத்தை அடைந்தார் என்று விளக்கும் பாடல்.

அனைவர் இடத்தில் அன்பு உடையவராய்,ஆரவாரங்கள் இல்லாதவராய்,இரக்கம் நிறைந்தவராய், அன்பும் பணிவும் கொண்டவராய், தாய் தந்தை சொல் மதிப்பவராய், காலம் அறிந்து நடைபவராய், பேதம் காணாதவரை, தெய்வத்தன்மை உடையவராய் வளர்ந்தார்.

அ ஆ .. க கா  வரிசை படுத்தி பொருள் பிசகாமல் இந்த பாடலை அமைத்தது கவிஞரின் கைவண்ணத்தை வெளிப்படுத்துகிறது.

மேலும் பல பாடல்கள் குறிப்பாக தத்துவ கருத்துகள் நிறைந்த பாடல்கள் , எதுகை மோனை நிறைந்து, சந்தம் சிதறாமல்  ஆழ்ந்த பொருள் உடையனவாய் விளங்குகிறது.   
 
ஆக்கம்
Thamizhsuvadi

Subscribe below to get future posts from தமிழ்ச்சுவடி