09 Jan 2022

யார்க்கும், எதற்கும், எங்கும், எப்பொழுதும் அஞ்சோம்;




புத்தாண்டில் அனைவர்க்கும் செயலில் ஒரு வேகம் பிறக்கும். மனதில் வேகத்தை ஊட்ட ஒரு கவிஞர் உண்டு என்றால் அது யாராக இருக்க முடியும். 

"மகாகவி சுப்ரமணிய பாரதியார்"


அவர் எழுதிய 
விநாயகர் நான்மணி மாலை  என்கிற பாடலிலிருந்து சில வரிகள்.  படித்து முடித்தவுடன் ஒரு புத்துணர்வும் எழுச்சியும் வருவது உறுதி.


பெயர்க்காரணம் 

புதுச்சேரியிலுள்ள மணக்குள விநாயகர் மீது பாடப்பட்ட பாமாலை இது. நான்கு வகையான இரத்தினங்களைக் கொண்டு மாலை தொடுப்பது போல வெண்பா , கலித்துறை ,விருத்தம், அகவல் (வேறொரு கட்டுரையில் விரிவாய்க் காண்போம்) என்னும் நான்கு வகைப் பாக்களை மாலையாகத் தொடுத்து பிள்ளையாருக்கு அணிவிக்கப்பட்டது. அதனால்  இது 'விநாயகர் நான்மணி மாலை ' என்று பெயர் பெற்றது 

அகவல் 


அச்ச மில்லை, அழுங்குத லில்லை,
நடுங்குத லில்லை, நாணுத லில்லை,
பாவ மில்லை, பதுங்குத லில்லை;
ஏது நேரினும் இடர்ப்பட மாட்டோம்;

அண்டஞ் சிதறினால் அஞ்ச மாட்டோம்;
கடல்பொங்கி எழுந்தாற் கலங்க மாட்டோம்;
யார்க்கும் அஞ்சோம், எதற்கும் அஞ்சோம்;
எங்கும் அஞ்சோம், எப்பொழுதும் அஞ்சோம்;

வான முண்டு , மாரி யுண்டு ,
ஞாயிறும் காற்றும்  நல்ல நீரும் ,
தீயும், மண்ணும், திங்களும், மீன்களும் 
உடலும், அறிவும், உயிரும் உளவே ;
தின்னப்  பொருளும் சேர்ந்திடப் பெண்டும் 
கேட்கப்  பாட்டும் காண நல்லுலகும் 
களித்துறை செய்ய கணபதி பெயரும் 
என்றும்இங்  குளவாம்;சலித்திடாய் ,ஏழை 
நெஞ்சே ;வாழி நேர்மையுடன் வாழி ,
வஞ்சகக் கவலைக் (கு)இடம் கொடேல் மன்னோ 
தஞ்ச  முண்டு சொன்னேன்,
செஞ்சுடர்த் தேவன் சேவடி நமக்கே.




அச்ச மில்லை, அழுங்குத லில்லை =  அச்சம் என்பது இல்லை. அதனால் அழுங்குதல் (வருந்துதல் ; துன்பப்படுதல்) இல்லை.
நடுங்குத லில்லை, நாணுத லில்லை, பாவ மில்லை  பதுங்குத லில்லை = யாரையும் கண்டு அஞ்சி நடுங்க தேவையில்லை.  பாவச்செயல்கள் செய்வதில்லை அதனால் வெட்கி தலைகுனிய தேவையில்லை, எதையும் மறைக்கின்ற வழக்கமில்லை   
ஏது நேரினும் இடர்ப்பட மாட்டோம்; = நேர்பட வாழ்வதால் என்ன நடந்தாலும் இடர் (துன்பம்) என்ற ஒன்று இல்லவே இல்லை 



அண்டஞ் சிதறினால் அஞ்ச மாட்டோம்; =  உலகம் சிறிதானாலும் அஞ்ச மாட்டோம்
கடல்பொங்கி எழுந்தாற் கலங்க மாட்டோம் = கடல் பொங்கி கரை தாண்டினாலும் கலங்க மாட்டோம்
யார்க்கும் அஞ்சோம், எதற்கும் அஞ்சோம்; = எவர்க்கும்  பயப்பட மாட்டோம்; எதற்கும் பயப்பட மாட்டோம் 
எங்கும் அஞ்சோம், எப்பொழுதும் அஞ்சோம்; = எந்த இடத்திலும் அஞ்ச மாட்டோம், எந்த நேரத்திலும் பயப்பட மாட்டோம் 
(இந்த நான்கு வரிகள் போதும் நாம் எதையும் செய்து முடிக்கலாம் என்ற நம்பிக்கை வருவதற்கு)


வான முண்டு , மாரி யுண்டு  = வானம் இருக்கிறது .மழை பொழிவதும் நடக்கிறது
ஞாயிறும் காற்றும்  நல்ல நீரும் = சூரியன் ,காற்று ,இனிய நீர் இருக்கிறது
தீயும், மண்ணும், திங்களும், மீன்களும் = நெருப்பு ,நிலம்,நிலவு ,நட்சத்திரங்கள் இருக்கின்றன
உடலும், அறிவும், உயிரும் உளவே ; =  ஆரோகியமான உடலும், நுண்ணிய அறிவும் இந்த உயிருக்கு இருக்கிறது
தின்னப்  பொருளும் சேர்ந்திடப் பெண்டும் =உண்ண உணவும் ,இன்பத்திற்கு மனையாளும்
கேட்கப்  பாட்டும் காண நல்லுலகும் = கேட்டு மகிழ சிறந்த  பாடல்களும், பார்த்து ரசிக்க அழகிய உலகமும்
களித்துறை செய்ய கணபதி பெயரும் = புகழ்ந்து பாடி இன்பமுற கணபதி கடவுளின் பெயரும்
என்றும்இங்  குளவாம்;சலித்திடாய் ,ஏழை  நெஞ்சே = எப்போதும் இங்கு இருக்கிறது. பேதை மனமே தளர்ந்து விடாதே
வாழி நேர்மையுடன் வாழி ,வஞ்சகக் கவலைக் (கு)இடம் கொடேல் = நெறி தவறாமல் வாழ்வாயாக,பொல்லாத கவலை தோன்ற அனுமதிக்காதே
மன்னோ தஞ்ச  முண்டு சொன்னேன்,= நான் சொல்கிறேன் உனக்கு தஞ்சம்  உண்டு
செஞ்சுடர்த் தேவன் சேவடி நமக்கே. = சிறந்த ஜோதிமயமான விநாயகப் பெருமானின்  பாதங்களே நமக்கு தஞ்சமாகும் 


பாரதி கூறும் அறிவுரை 


அச்சம் கொள்ளாதே. எதை கண்டும் எதற்காகவும் எவரை கண்டும் அச்சம் கொள்ள தேவையில்லை.   நிலம், நீர், காற்று, சூரியன் , நிலவு , விண்மீன், அறுசுவை உணவு, ஆரோகியமான உடல்  என புற இன்பம் தர இயற்கை இருக்கிறது. அக இன்பத்திற்கு நல்ல மனைவி, சிறந்த இசை மற்றும் கடவுளின் ஆசியும் இருக்கிறது. இவை அனைத்தும் இருப்பதால் மட்டும் அச்சம் இன்றி வாழ முடியுமா? 
இல்லை, இவை அனைத்தும் இருக்க நேர்பட வாழ்ந்தால் அச்சம் இல்லை. துணிந்து நாளையை எதிர்கொள்வோம். கணபதி அருளால் வெற்றி கொள்வோம்.


குறிப்புரை 


ன்பின்மை, ற்றலின்மை, யலாமை, கையின்மை, க்கம், யம், ழுக்கமின்மை, யாத துன்பம் ,.. என அணைத்து எதிர்மறை அனுபவங்களினாலும் உடலும், மனமும் வலிமை இழந்து சோர்வில் துவள்கின்ற இன்றைய உலக மக்கள் அனைவர்க்கும், அன்றே பாரதி அளித்த ஒளடதம்(கேடயம்) இந்தப்  பாடல்வரிகள்.


நேர்பட வாழ்


ஆக்கம்
தமிழ்ச்சுவடி & திருமதி. அநுராதா பிரபு

Subscribe below to get future posts from தமிழ்ச்சுவடி