18 Feb 2023

கம்பராமாயணம் - வண்ணம்


கம்பராமாயணம் - 


பாடலை  பார்க்கும் முன் நாம் தான் கவிஞன் என்று வைத்து கொள்வோம். கதை சூழலுக்கு பாடல் எழுத வேண்டும். 
இதுதான் காட்சி.

கதையின் நாயகன் மற்றொருவரோடு போர் புரிகிறான். இருவரும் ஒரே நிறம் உடையவர்கள். இருவரையும் வர்ணிக்க வேண்டும்.  ஒரே நிறத்தை வர்ணித்தாலும் ஒரு வர்ணனை உயர்வாகவும், மற்றொன்று தாழ்வாகவும் இருக்க வேண்டும்.   சாத்தியமா ?

கம்பன் இதை எவ்வாறு கையாள்கிறான் என்பதை காண்போம் 

  இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்;
இனி. இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி. மற்று ஓர்
துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரில்.
மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்;
கால் வண்ணம் இங்குக் கண்டேன்



ராமனின் பாதம் பட்டதால் மீண்டும் உயிர் பெறுகிறாள் "அகலிகை". அதை பார்த்து விஸ்வாமித்திரர் கூறுவதாக அமைகிறது இந்த பாடல்.

இவ்வண்ணம்  = இதைப் போன்று;   நிகழ்ந்த வண்ணம் = ஓர் சம்பவம் நடந்ததால்
(அகலிகை சாப விமோட்சனம் பெற்றதால் )

இனி. இந்த உலகுக்கு எல்லாம் =   இன்று முதல் உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுக்கும்

உய்வண்ணம் அன்றி.=  நன்மையை தவிர மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ? = நன்மை  அல்லது வேறு ஓர் துயரம் தரக்கூடிய எதுவும்  நடக்குமோ ? ?

(கல்லாக இருந்த அகலிகைக்கே சாப விமோட்சனம் கிடைத்ததால், உலகில் உள்ள உயிர்களுக்கு கண்டிப்பாக நன்மையை தவிர வேறு நடக்க வாய்ப்பில்லை என்ற பொருள் நயம் சிறப்பு.)


 மை வண்ணத்து அரக்கி போரில் =அழகிய ஓவியத்தை ஒரு துளியில் கெடுக்கும் மை போன்ற கரிய நிறத்தை உடைய தாடகை என்னும் அரக்கியுடன் வனத்தில் நிகழ்ந்த போரில்.

"மை" = அழகை கெடுக்கும் - அழகாய் இருக்கும் குழந்தையின் கன்னத்தில்  மை வைப்பது - அந்த குழந்தையின் அழகை குறைக்கும். (பிறர் கண்டு ஆசை படாமல் இருக்க வைக்கும் பொருளில் ஒன்று).
மேலும், அது இருக்கும் பொருளின் தன்மையை மறைக்கும். "மை பூசி மறைத்தல்"
  தாடகை அரக்கி என்பதால்  மை நிறம் என்ற வர்ணனை.


" மழை வண்ணத்து அண்ணலே! " =யாருக்கும் பாரபட்சம் இன்றி, எல்லா இடங்களிலும், வானில் இருந்து பொழியும் மழையின் பிறப்பிடமான  கார்மேகங்களின் நிறத்தை உடைய இராமனே!

ராமன் = கார்மேக நிறம்
மழை மேலிருந்து கீழ் வரும்.  பொழியும் பொது பாரபட்சம் பார்க்காது. கார்மேகம் குளிர்ந்த தன்மை உடையது.   ராமன் இறை அவதாரம். மேல் இருந்து கீழ் வந்தவன். அனைத்து  உயிர்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் அருள் பொழிபவன். ராமனின் தன்மை பார்ப்பவர்களின் நெஞ்சத்தை குளிர்விக்கும்.

இவ்வாறு நிறத்தை வர்ணித்து இருவரின் தன்மையும் வேறுபடுத்தி காட்டுவது கம்பனின் தனிச் சிறப்பு


" உன் கை வண்ணம் அங்குக் கண்டேன் " =.
"கை வண்ணத்தால்" ராமனின்  வில்லாற்றலால் தாடகை வீழ்த்தப்படுகிறாள். 

" கால் வண்ணம் இங்குக் கண்டேன் "
கௌதம முனிவரின் சாபத்தால் கல்லாக இருந்த அகலிகை , ராமனின்  "கால் வண்ணத்தால்"  திருப்பாதம் பட்டதால்  சாபவிமோசனம் பெற்று மீண்டும்  உயிர் பெற்றாள்.

கவிக்கோ அப்துர் ரஹ்மான் அவர்களின் கருத்து -ஒருவருக்கு உதவி தேவைப்படும் போது கை கொடுத்து உதவுவதும், ஒருவர் மீது கோபமோ, வெறுப்போ எழும் போது காலால் உதறி விடுவதே வழக்கம். ஆனால் ராமன் ஒரு அவதாரம்; அதனால் கால்களால் அருள்கின்றான். (அகலிகை) கைகளால் வீழ்த்துகிறான். (தாடகை).

கம்பனின் நுட்பம் கணக்கில் அடங்கா.


கம்பனின் இந்த பாடல் வழி கண்ணதாசன் எழுதிய பாடல் - பால் வண்ணம் பருவம் கண்டு, வேல் வண்ணம் விழிகள் கண்டு.
ஆக்கம்
தமிழ்ச்சுவடி

Subscribe below to get future posts from தமிழ்ச்சுவடி