10 Jan 2025

ஈகை vs வள்ளல்


நாம் ஒருவரை எப்படி மதிப்பிடுகிறோம்?
பெரும்பாலும் அவர்களின் செல்வம், பதவி அல்லது படிப்பை வைத்துத்தான். ஆனால்,  'ஈகை' என்னும் கொடுக்கும் குணத்தை வைத்து மதிப்பிடுகிறார் ஔவையார்.

எல்லோரும் தானம் செய்கிறார்கள். ஆனால், எந்த மனநிலையுடன் செய்கிறார்கள்? கொடுக்கும் விதத்தை வைத்து மனிதர்களைத் தரம் பிரிக்க முடியுமா? "


தண்டாமல் ஈவது தாளாண்மை-தண்டி  அடுத்தக்கால் ஈவது வண்மை - அடுத்தடுத்துப்
பின்சென்றால் ஈவது காற்கூலி - பின்சென்றும்
பொய்த்தான் இவனென்று போமேல்,
அவன்குடி எச்சம் இறுமேல் இறு 


                                                                         ஔவையார்.


தண்டாமல்: (இரப்பவர் தம்மிடம் வந்து) கேட்காதபோதும்: ஈவது: கொடுப்பது; தாளாண்மை:  சிறந்த குணம்.

தண்டி: (இரப்பவர் தம்மிடம் வந்து) கேட்டு அடுத்தக்கால்: தம்மை அணுகியபோது :வண்மை: வள்ளல் தன்மை

காற்கூலி:  நடைக்கூலி. பொய்த்தான்:  ஏமாற்றினான்

எச்சம்: அவன் சந்ததியும் இறுமேல்: அழியும்,கெடும்


முதல் வகை  - சான்றோர்
தண்டாமல் ஈவது தாளாண்மை”

ஒருவர் நம்மிடம் வந்து கையேந்தி, தன் வறுமையைச் சொல்லி கேட்பதற்கு முன்பே, அவரது தேவையை முகக்குறிப்பால் உணர்ந்து, வலியச் சென்று கொடுப்பதுதான் உண்மையான 'தாளாண்மை'. . கேட்காமல்கொடுப்பவர்களே சான்றோர்கள்.


இரண்டாவது வகை - வள்ளல்
“தண்டி அடுத்தக்கால் ஈவது வண்மை”

சரி, முதல் நிலையில் எல்லோராலும் இருக்க முடியாது. அடுத்த நிலை என்ன? ஒரு வறியவர் நம்மிடம் வந்து, தன் தேவையைச் சொல்லி கேட்டவுடன், முகம் சுளிக்காமல் உடனே கொடுப்பது 'வண்மை' (வள்ளல் தன்மை).
இதுவே வள்ளல் ஈகை.

மூன்றாவது வகை  - வணிக நிலை
“அடுத்தடுத்துப் பின்சென்றால் ஈவது காற்கூலி”

ஒருவன் உதவி கேட்டு வருகிறான். அவனை உடனே கவனிக்காமல், "இன்று போய் நாளை வா" என்று பலமுறை அலையவிட்டு, அவன் கெஞ்சிய பிறகு கொடுப்பதற்குப் பெயர் ஈகை அல்ல; அது 'காற்கூலி'.
அதாவது, அவன் இத்தனை முறை நடந்து வந்தானே, அந்த நடைகளுக்கு நீங்கள் கொடுக்கும் கூலியே தவிர, அது ஈகை ஆகாது என்கிறார்.

நான்காவது வகை  -  கருமி நிலை
“பின்சென்றும் பொய்த்தான் இவனென்று போமேல், அவன்குடி எச்சம் இறுமேல் இறு.”

ஒரு ஏழை பலமுறை அலைந்து திரிந்தும், அவனுக்கு எதுவும் கொடுக்காமல், அல்லது பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றினால், அந்த ஏழை மனம் நொந்து திரும்புவான். "இவன் ஒரு ஏமாற்றுக்காரன், வாக்கை நிறைவேற்றாமல் இருப்பவன்  " என்று அவன் மனம் வெம்பிச் சொன்னால், அந்தப் பணக்காரனின் குடும்பம் மட்டுமல்ல, அவனது சந்ததியே (எச்சம்) அழிந்து போகும் என்று சாடிச்சொல்கிறார் ஔவையார்.


ஒருவன் எவ்வாறு ஈகை செய்கிறான் என்பதை வைத்து ஒருவனின் தரத்தை வகுப்பது வியப்பான வரைமுறை.
கோபத்தை வைத்து எவ்வாறு ஔவையார் மனிதர்களை வகை செய்கிறார் என்பதை அறிய
https://www.thamizhsuvadi.com/articles/1










ஆக்கம்
தமிழ்ச்சுவடி

Subscribe below to get future posts from தமிழ்ச்சுவடி